ஹோண்டியஸ் கப்பலில் பயணித்த கனேடிய பிரஜைக்கும் ஹண்டா வைரஸ் தொற்று
ஹண்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 'எம்வி ஹோண்டியஸ்' என்ற சுற்றுலா கப்பலில் பயணித்த கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த நோய் பாதிப்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தின் வான்கூவர் தீவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நான்கு பேரில் ஒருவரான இவருக்கு, இலேசான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த சுற்றுலா கப்பல் பயணிகளிடையே ஹண்டாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் ஏற்கனவே மூன்று பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
தீவிரக் கண்காணிப்பு
கடந்த ஏப்ரல் 1ஆம் திகதி ஆர்ஜென்டினாவில் இருந்து புறப்பட்ட இந்தக் கப்பல், தென் அட்லாண்டிக் பெருங்கடல் வழியாகப் பயணித்து கடந்த வாரம் ஸ்பெயினின் டெனெரிஃப் தீவை வந்தடைந்தது.

அங்கு பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்ட நபர் தற்போது தீவிரக் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவருடன் வந்த மற்ற மூவருக்கும் இதுவரை தொற்று பாதிப்பு இல்லை என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள பிரித்தானியா கொலம்பியா மாகாண தலைமை சுகாதார அதிகாரி போனி ஹென்றி, "இந்த ஹண்டாவைரஸ் என்பது கொவிட் அல்லது இன்ஃப்ளூவன்ஸா போன்ற பிற சுவாச வைரஸ்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
இது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவாது என்பதால், உலகளாவிய பெருந்தொற்றாக மாறும் அபாயம் இதற்கு இல்லை" என்று பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.