மலையகம் வெறும் தொழிலாளர் வர்க்கமல்ல!15 இலட்சம் பேரை கொண்ட தேசிய இனம் - கனேடிய தூதுவரிடம் வலியுறுத்து
"மலையகத் தமிழர்களை வெறும் தோட்டத் தொழிலாளர் வர்க்கமாகச் சுருக்கிப் பார்ப்பது முறையற்றது. அவர்கள் 15 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஓர் இன அடையாளமுள்ள சிறுபான்மை தேசிய இனமாகும்" என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.
இலங்கைக்கான கனேடியத் தூதுவர் இஸபெல்லா மார்டினைக் கொழும்பிலுள்ள கனேடிய இல்லத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
வெள்ளை வான் கடத்தல்
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான இந்தத் தூதுக்குழுவில், கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினர்களான பரணீதரன் மற்றும் பாரத் அருள்சாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களிடம் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்ததாவது,

"இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் கொழும்பு வீதிகளில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்களுக்கு எதிராக நான் போராடிய போது, எனக்குத் தஞ்சம் தந்த இடமே இந்தக் கனேடிய இல்லமாகும்.
இன்று எமது நலிவுற்ற மலையக மக்களின் உரிமைகளுக்காக இங்கு வந்துள்ளோம். மலையகத் தமிழர்களில் கூலித் தொழிலாளர்கள் ஒரு சிறு பிரிவினரே (சுமார் ஒரு இலட்சம் பேர்). ஆனால், ஒட்டுமொத்தமாக 15 இலட்சம் பேரைக் கொண்ட ஒரு தேசிய இனமாக மலையகச் சமூகம் வளர்ந்துள்ளது.
முழுமையற்ற குடியுரிமை மற்றும் நவீன அடிமைத்தனத்தின் அறிகுறி
எனவே, அவர்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தொழிலாளர் பிரச்சினையாக மட்டும் பார்க்கக் கூடாது. தோட்டப் பிரதேசங்களில் வாழும் மக்கள் இன்றும் முழுமையற்ற குடியுரிமை மற்றும் நவீன அடிமைத்தனத்தின் அறிகுறிகளுடனேயே வாழ்ந்து வருகின்றனர். இது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும்.

கனடாவின் உலகளாவிய உதவிக் கரங்கள் மற்றும் மனித உரிமை கண்காணிப்பு நடவடிக்கைகள் நலிவுற்ற எமது மலையக மக்களையும் சென்றடைவதை கனடா உறுதிப்படுத்த வேண்டும் என்று தூதுவரிடம் வலியுறுத்தினோம்." - என்றார்.
இந்தக் கருத்துக்களைக் கனேடியத் தூதுவர் மிகவும் தெளிவாகப் புரிந்துகொண்டதுடன், இது குறித்த சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியதாகவும் மனோ கணேசன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.