கனடா - ஒட்டாவாவில் கொல்லப்பட்ட இலங்கையர்களுக்கு அஞ்சலி
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் கொல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளடங்களாக 6 இலங்கையர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது, அந்த நாட்டு நேரப்படி இன்று (10.03.20240 முற்பகல் 11 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அஞ்சலி நிகழ்வு
ஒட்டாவா நகர முதல்வரினால் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் அந்நாட்டு அரசியல் தரப்பினர் மற்றும் கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரட்ன வேறதுவ உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், சம்பவத்தில் உயிரிழந்த குறித்த 6 இலங்கையர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதற்காக கனடாவின் பால்மேடியா பூங்காவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததாக அந்நாட்டு ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளடங்களாக 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக 7 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
மேலும், 6 கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அதேநேரம், சந்தேகநபர் சார்பில் மன்றில் முன்னிலையாகுவதற்காக சட்டத்தரணி ஒருவரை ஏற்பாடு செய்வதற்காக வழக்கு விசாரணை எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |