இலங்கை தொடர்பில் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட கனடா
இலங்கையில் கடந்த மாதங்களாக நிலவிய அசாதாரண நிலை காரணமாக பல நாடுகள் தங்களது மக்களுக்கு இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், நாடு தற்போது மீண்டும் வழமை நிலைமைக்கு திரும்புவதால் பல நாடுகள் இலங்கைக்கான தங்களது பயண ஆலோசனையை தளர்த்தி வருகின்றன.
அத்துடன், அண்மைக்காலமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இதேவேளை, இலங்கை வழமை நிலைமைக்கு திரும்பி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பயண ஆலோசனையை தளர்த்தும் நாடுகள்
இந்த நிலையில், இலங்கைக்கான பயண ஆலோசனையை கனடா தளர்த்தியுள்ளது.
இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்து இலங்கையை செம்மஞ்சள் பட்டியலில் இருந்து மஞ்சள் நிற பட்டியலுக்கு குறைத்துள்ளது.
முன்னதாக இலங்கைக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு கனடா தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.
அதனை தற்போது தளர்த்தி அதிக அவதானத்துடன் செயற்படுமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு கனடா தெரிவித்துள்ளது.
மஞ்சள் பட்டியலில் இலங்கை
இலங்கையில் எரிபொருள், உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதன் காரணமாக இலங்கை மஞ்சள் பட்டியலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஓகஸ்ட் மாதத்துக்கு பின்னர் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பிரித்தானியா மற்றும் நோர்வே உட்பட பல ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன.