ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை! - கனடா அதிரடி நடவடிக்கை
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதித்து கனடா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொடர்ந்து ஐந்து நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா மோசமான தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், நூற்றுக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின் ஏராளமான இராணுவ இலக்குகளையும் ரஷ்யா அழித்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கிவ்- நகரை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், அணு ஆயுதங்களையும் தயார் நிலையில் வைக்க படையினருக்கு ரஷ்ய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனால் உலக நாடுகள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், உக்ரைன் மீதான தாக்குதலை அடுத்து பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார ரீதியிலான தடைகளை விதித்து வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய கனடா அரசு அதிரடி தடை விதித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கருத்து வெளியிடுகையில்,
“ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக போராடும் உக்ரைனின் வீரமிக்க செயலுக்கு கனடா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு கனடாவில் தடை விதிக்கப்படுகிறது.
இதனிடையே, ரஷ்ய படையெடுப்பிற்கு எதிரான இந்த போரில் உக்ரைனுக்கு இராணுவ டாங்கி எதிர்ப்பு ஆயுதம் மற்றும் நவீன ஆயுதங்களை கனடா வழங்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யர்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்ப தடை
ரஷ்ய குடிமக்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்ப அந்நாடு அரசாங்கம் தடை விதித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
இந்நிலையில். ஒரு நாட்டின் எல்லையை தாண்டி நடைபெறும் பண பரிவர்த்தனையை சுமூகமாக நடைமுறை படுத்த உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்புகளுக்கான சமூகம் என்ற ஷிப்ட் அமைப்பு உள்ளது.
இந்த அமைப்பில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளுக்கும் ரஷ்யாவுக்கு இடையேயான பண பரிவர்த்தனை தடைபட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள ரஷ்ய சொத்துக்களை பல்வேறு நாடுகள் முடக்கியுள்ளன.
இது போன்ற பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளால் ரஷ்யா பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்துள்ளது. மேலும், அமெரிக்க டொலருக்கு நிகரான ரஷ்ய ருபெலின் மதிப்பு பெரும் சரிவை சந்தித்துள்ளது. ஒரு அமெரிக்க டொலர் ரஷ்ய மதிப்பில் 109.6 ருபெலாக உள்ளது.
இதனால், ரஷ்யாவின் தேசிய வங்கி வட்டி விகிதத்தை 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய குடிமக்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்ப ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது.
மேலும், ஏற்றுமதியாளர்கள் பொருட்களை (கச்சா எண்ணெய்) ருபெலில் வாங்கவும் அறிவுறுத்தியுள்ளது.
நிலைகுலைந்து வரும் பொருளாதாரத்தை மீட்க ரஷ்யர்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்ப அந்நாட்டு அரசாங்ம் தடை விதித்துள்ளது.