உலக அரங்கில் அதிகரித்து வரும் வல்லரசுகளின் ஆதிக்கம்! முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து
உலக அரங்கில் அதிகரித்து வரும் வல்லரசுகளின் ஆதிக்கத்திற்கு மத்தியில், கனடா மற்றும் நோர்டிக் நாடுகள் தங்களுக்குள் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
கனடா மற்றும் டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, ஸ்வீடன் ஆகிய நோர்டிக் நாடுகள் இணைந்து, "நடுத்தர நாடுகளின் ஒத்துழைப்பு" (Middle Power Cooperation) என்ற புதிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளன.
முக்கிய நோக்கம்
ஆர்க்டிக் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் கூட்டாக எதிர்கொள்வதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாக, ஆர்க்டிக் பகுதியில் அதிகரித்து வரும் ரஷ்யா மற்றும் சீனாவின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதிலும், அப்பகுதியின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும் இந்தப் நாடுகள் இனி இணைந்து செயல்படும்.
இந்த புதிய கூட்டணியானது வெறும் இராணுவப் பாதுகாப்புடன் மட்டுமல்லாமல், சர்வதேச விதிகளைப் பாதுகாப்பதிலும், ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று கனடாவின் வெளி விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளாதாரம்
பெரிய வல்லரசுகளுக்கு இடையிலான மோதல்களால் சிறிய மற்றும் நடுத்தர நாடுகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவும், உலகப் பொருளாதாரத்தில் தங்களின் முக்கியத்துவத்தை நிலைநாட்டவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எரிசக்தி பாதுகாப்பு, கடல்சார் ஆராய்ச்சி மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற துறைகளில் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.
இத்தகைய வலுவான கூட்டணி வட துருவப் பகுதியில் நிலவும் பதற்றத்தைக் குறைப்பதோடு, சர்வதேச அரங்கில் கனடா மற்றும் நோர்டிக் நாடுகளின் செல்வாக்கை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.