OMP அலுவலகத்தின் அடுத்த நகர்வு: விளக்கம் கோரும் உறவுகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தலைவிதியை அறிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவினர்களின் நெருங்கிய உறவினர் ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடியாத நிலையில், கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக இயங்கி வரும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு (OMP) புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதன் நோக்கம் என்னவென? போரால் பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை நிறுவுதல், நிர்வகித்தல் மற்றும் செயற்படுத்தல் ஆகிய விதிகளுக்கு அமைவாக, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அண்மையில் அறிவித்திருந்தது.
அதற்கான விண்ணப்பங்கள் நாடாளுமன்ற இணையதளத்தில் (www.parliament.lk) காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கான உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான விரைவான இணைப்பு என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட வடிவமைப்பின் படி தயாரிக்கப்பட வேண்டும்." என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
காணாமற்போனோர் பிரச்சினை
காணாமற்போனோர் பிரச்சினையை தீர்க்க விரும்பினால் முதலில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை கலைக்க வேண்டுமென, “OMP அலுவலகத்திற்கு புதிய நியமன கோரிக்கை தொடர்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரின் நிலைப்பாடு” என்ற தலைப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வடக்கு, கிழக்கு சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையாகவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு விரும்புவார்களாயின் செயல் திறனற்ற இந்த OMP உடனடியாகக் கலைக்கப்படவேண்டும் என்பதுடன் எமது உறவுகள் சரணடைந்த, கையளிக்கப்பட்ட, கைது செய்யப்பட்ட முக்கியமான நான்கு காவலரண்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் விசாரிக்கப்பட்டு உண்மை அறியப்பட வேண்டும்.
எமது உறவுகளைக் காணாமலாக்கிய இராணுவ அதிகாரிகள் தற்போதும் உயிருடனும் பதவியிலும் உள்ளார்கள். அவர்களை உடனடியாக விசாரிப்பதன் மூலம் உண்மையை கண்டறிய வேண்டும். அதுவே காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வந்த எமக்கு நல்லெண்ண சமிக்ஞையாக இருக்கும்.
அதை விடுத்து எம்மால் நிராகரிக்கப்பட்ட OMP இற்கு புதியவர்களை உள்வாங்க ஆட்சேர்ப்பு செய்ய முனைவதானது எம்மை தொடர்ந்து ஏமாற்றவே சகலரும் முயற்சிக்கிறார்கள் என்ற உணர்வை பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் யோகராசா கனகரஞ்சனி மற்றும் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடதராஜா ஆகியோரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
புதிய அரசாங்கமும் கடந்த கால அரசாங்கங்களைப் போன்று தமது பிரச்சினைகளை பார்க்கும் விதத்தில் மாற்றத்தை காண முடியவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மாற்றம் எனும் கோஷத்துடன் பதவி ஏறிய புதிய அரசு, பழைய சிங்கள அரசுகள் போலவேதான் தமிழ் மக்களின் மிக முக்கியமான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனையை அணுகவுள்ளது என்பதையே காட்டுகின்றது.”
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 உடன்படிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய அப்போதைய அரசாங்கத்தினால், காணாமல் போனவர்கள் பற்றிய உண்மையை வெளிப்படுத்தும் நோக்கில், 2017 ஆம் ஆண்டு நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) ஸ்தாபிக்கப்பட்டது.
OMP சட்டம் வரையப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை பாதிக்கப்பட்டவர்களின் அபிப்பிராயங்களுக்கோ அல்லது அவர்களின் வேண்டுகோள்களுக்கோ செவி சாய்க்காது, சர்வாதிகாரப் போக்கில் அனைத்து விடயங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கும் தமிழ்த் தாய்மார்கள், உண்மையைக் கண்டறியும் பொறிமுறையானது பாதிக்கப்பட்டவர்களின் பங்கேற்புடன் செயற்படுத்தப்பட வேண்டுமெனவும், எனினும் அது வெளிப்படைத்தன்மையற்ற எதேச்சாதிகாரமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இடைக்கால நிவாரணம்
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் நோக்கில் 2015 இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் 4 தூண்களான உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள் நிகழாமையை உறுதி செய்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியுள்ள தமிழ்த் தாய்மார்கள், உண்மையை கண்டறிந்தபின் அவ்விடயம் நீதிப்பொறிமுறைக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும், எனினும் OMP ஆரம்பித்து ஏழு வருடங்கள் ஆகின்ற போதும் ஒரு உண்மையேனும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் காணாமல் போனோர் அலுவலகத்தின் (OMP) உறுப்பினர் தம்பையா யோகராஜா, 2024 நவம்பரில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு 21,630 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும், 3,800க்கும் அதிகமானோருக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ்த் தாய்மார்கள் தொடர்ச்சியாகக் கோரி வரும் நீதிக்குப் புறம்பாக இழப்பீடு அலுவலகம் அமைப்பதன் நோக்கத்தை சவாலுக்கு உட்படுத்தியுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு கிழக்கு சங்கம், நீதியை ஓரங்கட்டிவிட்டு இழப்பீட்டு அலுவலகம் திறக்க வேண்டிய தேவை என்னவெனவும், உண்மையை கண்டறியாமலே பணத்தை வழங்கி ஏழைகளின் வாயை மூடி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதற்காகவா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
2019 ஜூலை 7ஆம் திகதி உண்மையை கண்டறிவதற்காக நாம் ஒப்படைத்த ஐந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்கள் தொலைத்துவிட்டு அவற்றை மீள கோரியமையானது இந்த அலுவலகம் எவ்வளவு பொறுப்பின்மையுடன் செயற்படுகிறது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வடக்கு, கிழக்கு சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Parthiban அவரால் எழுதப்பட்டு, 07 December, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.