யாழில் மற்றுமொரு காணிக்கு பிக்குகளால் சிக்கல்: இன்று போராட்டத்துக்கு அழைப்பு
யாழ். கந்தரோடையில் தனியார் காணியைக் கொள்வனவு செய்துள்ள பிக்கு அதில் விகாரை அமைப்பதற்கு எடுத்துவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்றைய தினம் (07.05.2023) முன்னெடுக்கப்படவுள்ள இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசியப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், "கந்தரோடையின் வரலாற்றைச் சிங்கள - பௌத்த வரலாறாகத் திரிபுபடுத்தும் நோக்குடன் திட்டமிட்ட விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தமிழ்த் தேசியப் பேரவை
சிங்கள - பௌத்த பேரினாவாத அரசின் பூரண அனுசரணையுடன் தமிழ்த் தேசத்தின் இருப்பை அழித்து வரலாற்றைத் திரிபுபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் கட்டமைக்கப்பட்ட மரபுரிமைசார் இனவழிப்பு செயற்பாட்டுக்கு எதிராகக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
தமிழர் வாழ்வுரிமை மையம் மற்றும் கந்தரோடை சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களுடன்
இணைந்து இன்றைய தினம் (07.05.2023) காலை 10 மணிக்கு கந்தரோடையில் முன்னெடுக்கும்
தமிழ்த் தேசியப் பேரவை முன்னெடுக்கும் இப்போராட்டத்துக்குத் தமிழ்த் தேசிய
உணர்வாளர்களைக் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் " எனக் கூறியுள்ளது.