18 ஆம் திகதி அமைச்சரவை கட்டாயம் பதவியேற்கும்: எண்ணிக்கை தொடர்பில் இழுபறி
எதிர்வரும் 18 ஆம் திகதி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை கட்டாயம் பதவியேற்கும் என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அமைச்சர்களின் எண்ணிக்கை சம்பந்தமாக இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக அலி சப்றி நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர், நீதியமைச்சர் பதவியை அவருக்கு வழங்குவது தொடர்பில் பாரதூரமான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதுடன் நீதியமைச்சர் பதவியை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூக்கு வழங்க வேண்டும் என ராஜபக்ச குடும்பத்தினரின் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
இதன் காரணமாக அமைச்சர் பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ளவர்கள் சம்பந்தமாக இறுதி நேரம் வரை எவ்வித உறுதியான தகவல்களையும் அறிய முடியாது எனக் கூறப்படுகிறது.
எது எப்படி இருந்த போதிலும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் முன்னர் அமைச்சரவை நியமிக்கப்பட வேண்டியது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.