கொழும்பிலிருந்து வெளியேற வேண்டாம்: அமைச்சரவை கூட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு (Video)
இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறை குறித்து விவாதிக்கும் வகையில் அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் நாளை மறுதினம் (28.06.2023) இடம்பெறவுள்ளது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், அது எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30.06.2023) நாடாளுமன்றத்திலும் பொது நிதி தொடர்பான குழு முன்னிலையிலும் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பரிஸில் புதிய உலகளாவிய நிதிய ஒப்பந்தத்திற்கான உச்சிமாநாட்டில் பங்கேற்றிருந்த ரணில் விக்ரமசிங்க FRANCE 24 க்கு அளித்த செவ்வியில் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02.07.2023) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
வங்கிகளுக்கு நீண்ட விடுமுறை
மேலும், கடன் மறுசீரமைப்பு பிரேரணை இந்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதால், வெளிநாட்டு பயணங்கள் உட்பட கொழும்புக்கு வெளியிலுள்ள ஏனைய அனைத்து பயணங்களையும் மீளெடுத்து கொழும்பில் தங்கியிருக்குமாறு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று(26.06.2023) அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை இலங்கையில் வங்கிகளுக்கு நீண்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வர்த்தக வங்கிகள் மற்றும் ஓய்வூதிய நிதிகள் வைத்திருக்கும் திறைசேரி
முறி மற்றும் பத்திரங்களை மறுசீரமைப்பதே அரசாங்கத்தின் திட்டமாகும்.
எனினும் மக்களுக்கு அத்தியாவசியமான வங்கி செயற்பாடுகளை மேற்கொள்ள தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு பங்குச் சந்தையின் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |