யாழில் சட்டவிரோதமாக இறைச்சி வெட்டும் மாபியா கும்பல்: முற்றுகையில் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகாமையில் நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத மாடு மற்றும் ஆடு வெட்டும் இடம் ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாகவே இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த சுற்றிவளைப்பின் போது பொலிஸார், தலைவெட்டப்பட்ட நிலையில் நான்கு மாடுகளையும் உயிருடன் 21 மாடுகளையும் 4 ஆடுகளையும் கைப்பற்றியுள்ளதோடு ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேகநபரான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நீண்டகாலமாக குறித்த இடம் செயற்பட்டு வருவதாகவும் பல இடங்களில் இருந்து மாடுகள் யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலதிக தகவல் - தீபன்
நெடுந்தீவில் வொறி மீட்பு
மேலும், நெடுந்தீவில் இருந்து சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி வந்த லொறி ஒன்றினை நேற்று (03) மாலை யாழ்ப்பாணம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பகுதியிலிருந்து 20 மாடுகள் முறையான அளவு பரிமானங்களின்றி சட்டவிரோதமான முறையில் யாழ்ப்பாணம் நோக்கி லொறியில் கொண்டுவரப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாகவே இந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து வாகனத்தில் இருந்து 10 மாடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் 36 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் யாழ் பண்ணை பகுதியில் 10 மாடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் நெடுந்தீவில் குறிகாட்டுவான் வரை படகிலும் பின்னர் லொறிமூலம் மாடுகளை கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
செய்தி - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |