வணிகத்துறைகள் புதிய வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும்..! சந்தோஷ் ஜா
இந்தியா - இலங்கை இடையே இணைப்பு மிகவும் முக்கியம். இந்தியாவின் டிஜிட்டல் முன்னேற்றங்கள் இலங்கைக்கும் பயன்படக்கூடியவை. இந்த இணைப்புகளை வலுப்படுத்த வணிகத்துறைகள் புதிய வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற உலகளாவிய புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவ உச்சிமாநாடாட்டில் கலந்து கொண்டு உரயைாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இயற்கையான இருவழிச் செல்வாக்கு
இந்தியா - இலங்கை உறவு எந்த ஒப்பந்தம், வர்த்தக உடன்படிக்கை, அல்லது தூதரக அறிவிப்பினால் தொடங்கியது அல்ல. அது அவற்றிற்கு முன்பே உருவானது.
இரு அருகிய புவியியல் பகுதிகளுக்கு இடையேயான இயற்கையான இருவழிச் செல்வாக்கு அது. ஒருவரை ஒருவர் பாதித்து, இணைந்து வாழ்ந்து, இன்று நாம் பெருமைப்படும் ஒரு செழுமையான வரலாற்று மரபை உருவாக்கியது.

தற்போது அரசியல், வர்த்தகம் — அனைத்தும் மாற்றமடைந்து வருகின்றன. இந்த சூழலில், மேற்பரப்பான உறவுகள் முதலில் முறிகின்றன.
ஆனால் நாகரிக பிணைப்புகள் நிலைத்திருக்கின்றன. இந்தியா மற்றும் இலங்கை இடையே உள்ள நம்பிக்கை நூற்றாண்டுகளாக உருவானது. ஆனால் அதை நாம் பாதுகாத்து வளர்க்க வேண்டும்.
இன்றைக்கு இந்தியா, இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி. சுற்றுலா பயணிகளின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. இந்திய முதலீடுகள் தொலைத்தொடர்பு, ஆற்றல், நிதி சேவைகள் போன்ற பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இலங்கை தன்னிறைவு அடைய
2000 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தியா–இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (FTA) இரு நாடுகளுக்கும் பயனளித்துள்ளது. ஆனால் இன்னும் அதிக வாய்ப்புகள் உள்ளன. அதை மேம்படுத்துவது அவசியம்.

2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டது பாராட்டத்தக்கது. அந்த நேரத்தில் இந்தியா உணவு, எரிபொருள், மருந்து போன்ற உதவிகளை வழங்கியது. ஆனால் எதிர்காலத்தில் இலங்கை தன்னிறைவு அடைய உதவுவதே முக்கியம்.
இலங்கை ஒரு சிறிய நாடு” என்று கூறப்படுகின்றது. ஆனால் நான் அதை பெரிய எதிர்காலம் கொண்ட நாடாக பார்க்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.