சாய்ந்தமருதில் நடமாடும் வண்டிகள் மூலம் மாட்டிறைச்சி விற்பனை செய்வதற்கு தீர்மானம்
சாய்ந்தமருது மாட்டிறைச்சி கடை உரிமையாளர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதன் பின்னரே வியாபார அனுமதிப்பத்திரம் சுழற்சி முறையில் வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் றிசாட் அவர்களின் தலைமையில் மாட்டிறைச்சி கடை உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று(30) நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் மாட்டிறைச்சி கடைகளைத் திறந்து வியாபாரம் செய்யாமல் நடமாடும் வண்டிகள் மூலம் விற்பனை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இறைச்சியினை பொதி செய்து பொதுச் சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ், குறித்த ஒரு கிராம சேவகர் பிரிவுக்குள்/ குறித்த ஒரு பரப்புக்குள் குறிப்பிட்ட ஒரு வியாபாரி மாத்திரமே விற்பனை செய்ய முடியும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விற்பனை அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு முன் மக்களின் நலன் கருதி அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதன் பின்னரே வியாபாரிகளுக்கு வியாபார அனுமதிப்பத்திரம் சுழற்சி முறையில் வழங்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார வழிமுறைகளைப் பேணாத மற்றும் நிபந்தனைகளுக்கப்பால் செயற்படும் வியாபாரிகளுக்கு விற்பனை அனுமதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்படுவதோடு, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் மற்றும்
பொதுச் சுகாதார பரிசோதகர்களான எம்.என்.எம்.பைலான், எம்.எம்.எம்.பைசால்,
ஏ.எல்.எம்.அஸ்லம் மற்றும் எமது அலுவலக உத்தியோகத்தர்களான
எம்.எஸ்.எம்.இம்தியாஸ், ஏ.எஸ்.எம். ஹாரிஸ் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

