முழங்காவில் - மன்னார் வீதியில் விபத்து : மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் (Photos)
யாழ்ப்பாணம் - மன்னார் பாதையூடாக பயணித்த இரண்டு பேருந்துகள் இரண்டு, ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முயற்சித்தமையினால் ஒரு பேருந்து நிலைதடுமாறி அருகில் இருந்த மரத்திற்கு அருகில் சென்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று(18) மாலை 03.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பேருந்தில் பயணித்த நூற்றுக்கணக்கானோர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று மதியம் 3 மணியளவில் புறப்பட்ட தனியார்
பேருந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு முழங்காவில் முக்கொம்பன் பகுதியில் பயணித்து
கொண்டிருந்த நிலையில் பின்னால் வந்த மற்றைய தனியார் பேருந்து சாரதியின்
செயற்பாட்டால் நிலைதடுமாறி உள்ளது.
மணல் திட்டால் தவிர்க்கப்பட்ட விபத்து
பின்னால் வந்த சாரதி வேகமாக வாகனத்தை செலுத்தியதுடன் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் வாகனத்தை செலுத்தி உள்ளார்.
இதன் காரணமாக மன்னார் நோக்கி வந்த தனியார் பேருந்து நிலைதடுமாறி அருகில் உள்ள மரத்தில் மோதும் விதமாக சென்ற நிலையில் மரத்தை சூழ இருந்த மணல் திட்டு காரணமாக விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டதுடன் பேருந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.
தொடர்ச்சியாக மன்னார் யாழ்ப்பாணம், மன்னார் வவுனியா வீதிகளில் பேருந்து சாரதிகள் மக்களின் உயிர்களை மதிக்காது பேருந்துகளை போட்டி போட்டு செலுத்தும் சம்பவங்களும் அதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் சம்பவங்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |