தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய பேருந்து உரிமையாளர்களின் பயணப்பாதை அனுமதிப் பத்திரம் இடைநிறுத்தம்
கொரோனா தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய பேருந்து உரிமையாளர்களின் பயணப்பாதை அனுமதிப் பத்திரங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி போக்குவரத்தில் ஈடுபட்ட சுமார் ஐம்பது பேருந்துகளின் பயணப்பாதை அனுமதிப் பத்திரம் தற்காலிக அடிப்படையில் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பேருந்து போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கொவிட் நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை உதாசீனம் செய்யும் வகையில் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் நபர்களின் பேருந்து பயணப்பாதை அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் சுகாதார விதிமுறைகள் மீறப்படுகின்றதா என்பது உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொவிட் தொற்றுக்கு இலக்கான 68 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.