பேருந்துக் கட்டணங்கள் 20 சதவீதம் அதிகரிக்கும்..
அடுத்த மாதம் மேற்கொள்ளப்படவுள்ள வருடாந்த பேருந்துக் கட்டண திருத்தத்தின்போது பேருந்துக் கட்டணங்கள் 20 சதவீதத்தினால் அதிகரிக்கும் நிலை வரும் என்று கெமுணு விஜேரத்ன எதிர்வு கூறியுள்ளார்.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுணு விஜேரத்ன, பேருந்து கட்டணங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எரிபொருள் விலை அதிகரிப்பினால் நாடு முழுவதும் தனியார் பேருந்துச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் கட்டணம்
பேருந்து உரிமையாளர்களின் இழப்புகளைக் குறைப்பதற்காகப் பயணங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள பேருந்து உரிமையாளர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கத் தவறினால், அடுத்த மாதம் செயல்படுத்தப்படவுள்ள வருடாந்திர பேருந்துக் கட்டணத் திருத்தத்தில் பேருந்துக் கட்டணங்கள் ஏறக்குறைய 20 rசதவீதம் வரை அதிகரிக்கக்கூடும். குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 35 ரூபாவைத் தாண்டும்.

பேருந்துச் சேவைகள் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைகளால் ஒருங்கிணைக்கப்படுவதால், தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் பயண நேரங்களைத் திருத்தியமைக்குமாறு அந்த அதிகாரசபைகளுக்கும் மாகாண சபைகளுக்கும் எழுத்துப்பூர்வமான அறிவிப்புகள் அனுப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் கெமுணு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அதிகார சபைகளுக்கு உரிய கடிதங்களை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.