கொழும்பு நோக்கிச் செல்லவிருந்த இரு சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்
காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லவிருந்த இரு சிறுமிகளை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய பேருந்து நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கைது நடவடிக்கை நேற்று(05.10.2024) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது, “பெற்றோர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 14 வயதுடைய இரு சிறுமிகள் கொழும்புக்குச் செல்வதற்காக கடந்த 2 ஆம் திகதி புதன்கிழமை காலை பாடசாலை செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.
கொழும்புக்குச் செல்ல திட்டம்
இவர்கள் பேருந்தில் மட்டக்களப்பு நகருக்கு சென்று பாடசாலை உடைகளை மாற்றிவிட்டு கொழும்புக்குச் செல்வதற்காக தரிப்பிடத்தில் காத்திருந்துள்ளனர்.
இதன்போது, இவர்கள் அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் ஏறி ஓட்டமாவடி செல்வதற்கு பயணச்சீட்டைப் பெற்றுள்ளனர்.
பின்னர், இந்த இருவரும் ஓட்டமாவடியில் இறங்காமல் பேருந்திலேயே உறங்கியுள்ளனர். இதனையடுத்து, பேருந்து சாரதியும் நடத்துனரும் உறங்கிக்கொண்டிருந்த இரு சிறுமிகளையும் எழுப்பிவிட்டு ஓட்டமாவடியை கடந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
சிறுமிகள் தாங்கள் கொழும்புக்கு செல்லவிருப்பதாக நடத்துனரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து, சாரதியும் நடத்துனரும் சிறுமிகளை கொழும்பு நோக்கிச் செல்லும் தொடருந்தில் ஏற்றிவிடுவதாகக் கூறி திருகோணமலையில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்று இரு நாட்கள் அடைத்துவைத்து தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியுள்ளனர்.
பொலிஸார் கைது
தொடர்ந்து சாரதியும் நடத்துனரும் சிறுமிகளை திருகோணமலையிலிருந்து அழைத்துச்சென்று கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு காத்தான்குடி பகுதியில் விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து , பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளும் தங்களது வீடுகளுக்கு திரும்பி சென்று நடந்த சம்பவம் தொடர்பில் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருகோணமலை மற்றும் கல்முனை நற்பட்டிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 35 மற்றும் 27 வயதுடைய சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |