யாழில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து: வெளியான காரணம் (Video)
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாவல்கட்டு பகுதியில் பேருந்து ஒன்று தீ விபத்திற்கு உள்ளாகி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இன்று (21.09.2023) அதிகாலை இடம்பெற்ற சம்பவத்தில் எலியாஸ் சுரேஷ்குமார் என்பவரது பேருந்தே எரிந்து சாம்பலாகியுள்ளது.
குறித்த பேருந்து கடந்த திங்கட்கிழமை பயணிகளை ஏற்றியவாறு சுற்றுலாவிற்கு சென்றது. இவ்வாறு சுற்றுலா சென்ற பேருந்து இன்று அதிகாலை மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளது.
இரண்டு பாரிய சத்தங்கள்
சாரதி, பேருந்தின் உரிமையாளரின் வீட்டிற்கு முன்னால் உள்ள காணியில் பேருந்தை நிறுத்தி விட்டு பேருந்தின் உரிமையாளருடன் கதைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்
சிறிது நேரத்தில் இரண்டு பாரிய சத்தங்களுடன் பேருந்து எரிய ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கடற்றொழிலுக்கு செல்வதற்கு சென்ற இளைஞர்கள் பேருந்து எரிவதை அவதானித்த நிலையில் தீயினை அணைக்க முயன்றனர். இருந்தும் பேருந்து முற்றாக தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.
இயந்திர கோளாறு காரணமாக பேருந்து தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டுள்ளது. தடயவியல் பொலிஸார் தடயங்களை பெற்று விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிலுள்ள ஆனைக்கோட்டை பகுதியில் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
குறித்த அனர்த்தம் இன்று (21.09.2023) அதிகாலை 3.40 மணியளவில் நேர்ந்துள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து
ஆனைக்கோட்டை, சாவல்கட்டு பகுதியில் உரிமையாளர் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதே பேருந்து தீப்பிடித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்: கஜி