கொழும்பில் இருந்து சென்ற பேருந்து விபத்து - 18 பேர் காயம் - ஐவர் ஆபத்தான நிலையில் (Video)
கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பு - ஹட்டன் பிரதான வீதியில் வட்டவளை சிங்களக் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் சுமார் 18 பயணிகள் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐவர் ஆபத்தான நிலையில்
விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பேர் ஆபத்தான நிலையில், நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த மற்றையவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வட்டவளை பிராந்திய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.
எதிர்திசையில் பயணித்த பேருந்திற்கு வழிவிட முற்பட்ட போது பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததனால் இந்த விபத்து நேர்ந்ததாக பொலிஸ் நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
விபத்தின் போது பேருந்தில் சுமார் 100 பயணிகள் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பேருந்தின் சாரதி வட்டவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.