இலங்கையை உலுக்கிய பேருந்து விபத்து குறித்து வெளியான புதிய தகவல்!
எல்ல - வெல்லவாய பகுதியில் விபத்துக்குள்ளான குறித்த பேருந்து, விபத்து நடந்த நேரத்தில் மணிக்கு 70 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பயணித்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த பேருந்து விபத்துக்கு தொழில்நுட்ப பிரச்சினை காரணமா என்பதை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு
இதற்கமைய, அரசு பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் விசாரணை நிபுணர் நாளை எல்ல பகுதிக்குச் சென்று பேருந்தின் பாகங்களை ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட பேருந்தின் சிதைவுகள் தற்போது எல்ல காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மோட்டார் வாகன ஆய்வாளரும் நாளை எல்ல பகுதிக்குச் செல்லவுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை
இராவண எல்ல பகுதியில் கடந்த வியாழக்கிழமை(04) பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த 34 பேரில்15 பேர் உயிரிழந்திருந்தனர்.
மேலும், 18 பேர் காயமடைந்ததாகவும் ஒரு பயணி காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தங்காலை நகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற குறித்த தனியார் சுற்றுலாப் பேருந்து, நுவரெலியாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, ஒரு சொகுசு காரில் மோதி பள்ளத்தில் விழுந்தமை குறிப்பிடத்தக்கது.




