சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் புர்கா அணிய தடை - மீறினால் அபராதம்
பொது இடங்களில் முகத்தை மறைக்கும் வகையில் உடை அணிபவர்களுக்கு 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்க சுவிட்சர்லாந்து திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு வலது சாரியினர் கொண்டு வந்த ‘புர்கா தடை’ என்னும் மசோதா குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 2009ம் ஆண்டு புதிய மினாராக்களுக்கு தடை விதித்த அதே குழுவால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம்
அந்த மசோதா புர்கா தடை என அழைக்கப்பட்டாலும், கால்பந்து போட்டி காண வந்த ஒருவர் முகத்தை மறைக்கும் வகையில் துணி கட்டுவதற்கும் சரி, பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் நிகாப் அணிவதற்கும் சரி, மொத்தத்தில் கண், மூக்கு, வாய் ஆகிய பகுதிகளை மறைக்கும் வகையில் உடை அணிய தடை என்பதே அதன் பொருளாகும்.
இந்த தடையை மீறுபவர்களுக்கு 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்க சுவிட்சர்லாந்து திட்டமிட்டு வருகிறது. உண்மையில், 10,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டது. அது மிக அதிகம் என்பதால் தற்போது 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், முகத்தை மறைப்பதற்கான தடை பொது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.