நாடாளுமன்றில் பிரசன்னமாகாத நிதியமைச்சர்: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை (VIDEO)
2022ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் இரண்டாம் வாசிப்புக்கான இரண்டாம் நாள் விவாதத்தின் போது நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாடாளுமன்றில் பிரசன்னமாகியிருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளருமான லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella), இன்றைய தினம் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போது நிதியமைச்சரிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.
எனினும் நிதியமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகியிருக்கவில்லை. இந்த நிலையில் இராஜாங்க அமைச்சர்கள், எதிர்க்கட்சியின் கேள்விகளுக்கு பதில் வழங்க முடியும் என அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், குறுக்கிட்டு உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), சம்பிரதாயபூர்வமாக ரொனி டி மெல் காலத்தில் இருந்து பாதீட்டு விவாதம் இடம்பெறும் போது நிதியமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகி வந்தனர்.
எனினும் முதல் நாள் விவாதத்தில் இருந்து பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகவில்லை. எனவே நாளை முதல் நாடாளுமன்றத்துக்கு அவர் வரவேண்டும் என அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
