ஒரே கட்டத்தில் சம்பள அதிகரிப்பு இல்லை! 10 ஆயிரம் மட்டுமே - அரச ஊழியர்களுக்கு ரணில் வைத்த செக்
புதிய இணைப்பு
அரச ஊழியர்களுக்கு தற்போதுள்ள 7,800 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2024 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேலும் 10,000 ரூபாவால் உயர்த்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2,500 ரூபாவால் அதிகரிக்கப்படுவதோடு, அதன்படி 2024 இல் ஓய்வூதியத்திற்காக 386 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
கடந்த காலங்களில் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட அரச ஊழியர்களின் அனர்த்தக் கடன் வசதி, 01-01-2024 முதல் முன்னர் காணப்பட்டவாறே வழங்கப்படும்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
அரச சேவையாளர்களுக்கு ஒரே கட்டத்தில் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்சமயம் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், 2023 ஆம் ஆண்டு 3415 பில்லியன் ரூபா அரச வருமானம் எதிர்பார்க்கப்பட்ட போதும், 2410 பில்லியன் ரூபா மாத்திரமே திரட்டப்பட்டுள்ளது. ஆகவே வரி வருமான எதிர்பார்ப்பு இலக்கு தோல்வி.
அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும்
அரசியல் நோக்கங்களுக்காக மாயைகளைப் பரப்புவதை நிறுத்துமாறும், அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்தித்து நாட்டை உயர்த்துவதற்கு அனைவரும் தம்மை உண்மையாக அர்ப்பணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
அரச சேவையாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டுமாயின் அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது நாணயம் அச்சிட வேண்டும், கடன் பெற வேண்டும்.
ஒரு தரப்பினரை மாத்திரம் திருப்திப்படுத்துவது சமவுடைமை கொள்ளைக்கு எதிரானது.
சம்பளத்தை அதிகரிக்குமாறு ஒரு தரப்பினர் போராடுகிறார்கள். அரச சேவையாளர்கள் மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். அரச சேவையாளர்களுக்கு ஒரே கட்டத்தில் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |