இரட்டை குடியுரிமையைக்காக்க மொட்டு கட்சி போடும் வியூகம்-செய்திகளின் தொகுப்பு
தனிநபர்களை இலக்கு வைத்து முன்வைக்கப்படும் அரசமைப்பு திருத்தங்களுக்கு தமது கட்சி ஆதரவு வழங்காது. மக்களுக்கும் நன்மை பயக்ககூடிய புதியதொரு அரசமைப்பே நாட்டுக்கு தேவை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதன்போது அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,“தனிநபர்களை இலக்கு வைத்து கொண்டுவரப்படும் அரசமைப்பு திருத்தங்களுக்கு எதிர்ப்பு என்பதை எமது கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.
எமது நாட்டில் ஒரு மதக்குழு, இனம் மற்றும் நபர்களை இலக்குவைத்தே அரசமைப்பு மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனியும் அத்தகைய நடவடிக்கை ஏற்புடையதாக இருக்காது. ஒரு நாடாக முன்னோக்கி பயணிக்க வேண்டும்.
எனவே, தனிநபர் மற்றும் அரசியல் கட்சிகளை இலக்கு வைத்தும், மக்களுக்கு நன்மை பயக்காத விதத்திலும் கொண்டுவரப்படும் அரசமைப்பு திருத்தங்களுக்கு எமது கட்சி இணங்காது.ஜனாதிபதியிடமும் இந்த விடயத்தை எடுத்துரைத்துள்ளோம்.”என கூறியுள்ளார்.