சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னதிற்கு பௌத்த தேரர் உபதேசம்
ஸ்ரீலங்காவின் புதிய சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்னம் தனது கடமையை அச்சமின்றி சரியான தீர்மானங்களை மேற்கொண்டு நிறைவேற்றுவார் என தாம் நம்புவதாக கலாநிதி கிரிந்தே அசாஜி தேரர் தெரிவித்துள்ளார்.
நாடு தொடர்பிலும் நாட்டிற்கு காணப்படும் சவால்கள் தொடர்பிலும் சிந்தித்து புதிய சட்டமா அதிபர் தீர்மானங்களை மேற்கொள்வார் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்காவின் புதிய சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்னம் மகா சங்கத்தினரின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இன்று கங்காரமய விகாரைக்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட புதிய சட்டமா அதிபருக்கு ஆசிர்வாதம் வழங்கிய கலாநிதி கிரிந்தே அசாஜி தேரர், அவருக்கு சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
மிகவும் பெறுமதியான பதவியை நீங்கள் பெற்றுள்ளீர்கள். அந்த பதவிக்கான பெறுமதியை பெற்றுத்தர, இந்த நாட்டில் சட்டத்தை நிலைநாட்டி, சாதாரண சமூகத்தையும், தர்மத்துடனான அரசையும் கட்டியெழுப்ப உங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த பொறுப்பினை சரியாக, நாட்டின் பக்கம் இருந்து சிந்தித்து, நாட்டிற்கு காணப்படும் சவால்கள் தொடர்பில் சிந்தித்து, உங்களது முதிர்ச்சி, அறிவு மற்றும் உங்களது அனுபவத்தின் அடிப்படையில் நிறைவேற்றுவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
உங்களது தற்போதைய வயசினை கருத்திற்கொண்டு, எதிர்வரும் உங்கள் பதவிக் காலத்தில் உங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பினை நிறைவேற்ற சரியான தீர்மானங்களை அச்சமின்றி மேற்கொண்டு செயற்படுவீர்கள் என நாம் நம்புகின்றோம்.
ஸ்ரீலங்காவின் புதிய சட்ட மா அதிபராக தமிழரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்னம் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமா அதிபராக செயற்பட்டுவந்த தப்புல டி லிவேராவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அந்தப் பதவிக்கு சஞ்சய் ராஜரத்னம் பெயரிடப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்காவின் 48 ஆவது சட்டமா அதிபராக நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் சஞ்சய் ராஜரத்னம் பதவிப்பிரமாணம்
செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.