ஞானசாரருக்காக நீதிமன்றத்தின் வளாகத்திற்கு முன்னால் காத்திருக்கும் பௌத்த பிக்குகள்
கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக பெருந்திரளான பௌத்த பிக்குகள் ஒன்று திரண்டுள்ளனர்.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், முஸ்லிம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் முன்னிலையாவதற்காக சிறையில் இருந்து இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
ஞானசாரருக்கு ஆதரவு
இந்தநிலையில், ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக மிக அதிகளவிலான பௌத்த பிக்குகள் ஒன்று திரண்டு, ஞானசாரருக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, பொதுமன்னிப்பு பெறுவதற்கு முன்பாக கடந்த காலத்தில் ஞானசாரருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத் தண்டனையின் எஞ்சிய காலப் பகுதியை நடைமுறைப்படுத்துமாறு அண்மையில் உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, தனது தண்டனைக் காலத்தை தொடரும் பொருட்டு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஞானசார தேரர், நேற்றையதினம் காலை மற்றுமொரு வழக்கிற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, அவருடைய காவியுடை களையப்பட்டு, வெள்ளை நிற சிறைச்சாலை அங்கி அணிவிக்கப்பட்டிருந்தார்.
இந்த ஆடை மாற்றத்திற்கு எதிராக அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருவதுடன் இன்று கொழும்பு அமைதியான போராட்டத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்தநிலையில், கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகாமையில் பெருமளவிலான பௌத்த பிக்குகள் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.