ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றாலும் 50% வாக்குகள் இல்லை! புத்திக பத்திரன விமர்சனம்
அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், வரலாற்றிலேயே முதல் தடவையாக 50 சதவீத வாக்குகளைப் பெற முடியாத ஒரு ஜனாதிபதி என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(13.03.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த மக்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தலின் போது வடக்கு மக்கள் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்தார்கள். வடக்கு, கிழக்கு ஆகிய இரு மாகாணங்களிலும், அதுபோலவே தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஏனைய பல பிரதேசங்களிலும் 2024- இல் மாத்திரமல்ல, கடந்த 2019 ஆம் ஆண்டிலும் மக்கள் சஜித் பிரேமதாசவுக்கே வாக்களித்திருந்தார்கள்.

ஆனால் கோட்டாபய ராஜபக்ச காலத்தில் சிங்கள மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் முடிவுகள் வேறுவிதமாக அமைந்தன. அதன் காரணமாக எம்மால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாமல் போனது.
அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், வரலாற்றிலேயே முதல் தடவையாக 50 சதவீத வாக்குகளைப் பெற முடியாத ஒரு ஜனாதிபதியாகவே அவர் தெரிவு செய்யப்பட்டார்.
43 சதவீத வாக்குகளைப் பெற்று அவர் அடைந்த வெற்றியானது ஒரு கௌரவமான வெற்றியாகக் கருத முடியாது. பொதுத் தேர்தலின் போது வடக்கில் ஆசனங்களை பெற முடியவில்லை.
உண்மையில் வடக்கில் மாத்திரமல்ல, இலங்கை முழுவதிலும் நாம் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இது கடந்த தேர்தலின் விளைவு மட்டுமல்ல, இலங்கைக்கு ஜனாதிபதித் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் தொட்டே நிலவி வரும் ஒரு அரசியல் போக்காகும். உதாரணமாக, 1982 ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆர். ஜயவர்தன வெற்றி பெற்றார்.
அதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முடிவுகள் அவருக்குச் சார்பாகவே அமைந்தன.
ஜனாதிபதி தேர்தல்
கடந்த 1988 டிசம்பர் 19 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணசிங்க பிரேமதாச வெற்றி பெற்றார்.
அதன் பின்னர் 1989 பெப்ரவரி 15 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 125 ஆசனங்களைப் பெற்றது. 1994 இல் பொதுத் தேர்தல் முதலில் நடைபெற்றது.

சந்திரிகா குமாரதுங்க கஷ்டப்பட்டு ஒரு அரசாங்கத்தை அமைத்தார். ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் இலட்சக்கணக்கான பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார்.
இவ்வாறு அடுத்தடுத்து இரண்டு தேர்தல்கள் நடைபெறும் போது, முதல் தேர்தலின் முடிவுகள் இரண்டாவது தேர்தலின் முடிவுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாகவே பொதுத் தேர்தலில் இவ்வாறான ஒரு முடிவு எங்களுக்குக் கிடைத்தது என்றார்.