இங்கிலாந்தில் இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை! - பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு
ஹாம்ப்ஷயர் High street பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஒருவர் கொடூரமாக குத்திக் கொல்லப்பட்டுள்ளதாகவும், இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பொலிஸார் இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் லிமிங்டனில் உள்ள ரோயல் பிரிட்டிஷ் லெஜியனுக்கு வெளியே தாக்குதல் இடம்பெறுவதாக முறைப்பாடு கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தனர். இந்த தாக்குதலில் 23 வயதான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு 23 வயது நபர் பலத்த காயமடைந்துள்ளதாகவும், 23 வயதான பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் 14 வயதான சிறுவன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். "வாய் தகராறு" பின்னர் மோதலாக மாறியதால் இந்த சம்பவம் நடந்ததாக ஹாம்ப்ஷயர் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த ஆணும் பெண்ணும் தற்போது சவுத்தாம்ப்டன் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 வயது சிறுவனுடன் 29, 20 மற்றும் 18 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் லிமிங்டனில் இருந்து வந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தற்போது பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தலைமை இன்ஸ்பெக்டர் டேவ் ஸ்டோரி (Dave Storey) கருத்து வெளியிடுகையில்,
"இது ஒரு தீவிரமான சம்பவம், இந்த சம்பவம் ரோயல் பிரிட்டிஷ் லெஜியனில் ஏற்பட்ட வாய் தகராறைத் தொடர்ந்து நிகழ்ந்தது என்று நாங்கள் நம்புகிறோம், எங்கள் விசாரணைகளின் ஒரு பகுதியாக நான்கு பேரை கைது செய்துள்ளோம்.
"அதிகாரிகள் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர், மேலும் அந்தப் பகுதியில் ரோந்து அதிகரிக்கப்படும். இந்த சம்பவம் குறித்து உங்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால், தயவுசெய்து அதிகாரிகளை அணுக தயங்க வேண்டாம்." என அவர் வலியுறுத்தியுள்ளார்.