பிரித்தானிய இளவரசர் அண்ட்ரூ மீது வரி மோசடி குற்றச்சாட்டு
பிரித்தானிய இளவரசர் அண்ட்ரூ (Andrew Mountbatten-Windsor) வர்த்தகத் தூதுவராகப் பணியாற்றிய காலத்தில், மக்களின் வரிப்பணத்தை மசாஜ் சேவைகளுக்கும், ஆடம்பரப் பயணங்களுக்கும் முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக எழுந்துள்ள முறைப்பாடுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
2001 முதல் 2011 வரையிலான காலப்பகுதியில் அவர் மேற்கொண்ட பயணங்களின் போது, "மசாஜ் சேவைகளுக்காக" அவர் கோரிய தொகையை வழங்க அப்போதைய சிவில் ஊழியர்கள் மறுத்த போதிலும், உயர் அதிகாரிகளின் தலையீட்டால் அந்தத் தொகை வழங்கப்பட்டதாக ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்ட்ரூவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகள் பல்வேறு பட்ஜெட்டுகளில் மறைக்கப்பட்டதால், அவற்றை முறையாகக் கண்காணிக்க முடியவில்லை என்றும், அவருடைய செலவினங்கள் "இரப்பர் ஸ்டாம்ப்" மூலம் எந்தவித ஆய்வும் இன்றி அங்கீகரிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்
அவர் ஒரு வர்த்தகப் பிரதிநிதியாகச் செயல்பட்டபோது, பல நேரங்களில் தேவையில்லாத கருத்துக்களைக் கூறி வர்த்தக முயற்சிகளுக்குத் தடையாக இருந்ததாகவும், சில சமயங்களில் அதிகாரிகளிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும் முன்னாள் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் அண்ட்ரூ எந்தத் தவறும் செய்யவில்லை என்று தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்குகளிலும் அவரது பெயர் அடிபடுவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், பொது அலுவலகத்தில் முறைகேடாக நடந்து கொண்டதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், தேம்ஸ் வேலி காவல்துறையினரால் அண்ட்ரூ கடந்த வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
வர்த்தகத் தூதுவர்களின் பொறுப்புக்கூறல் குறித்து நாடாளுமன்றக் குழு ஆய்வு செய்ய உள்ள நிலையில், இந்த விவகாரம் பிரித்தானிய அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.