பிரித்தானிய பொருளாதாரம் தொடர்பில் ரிஷி சுனக் கடுமையான முடிவுகளை முன்னெடுப்பாரா...!
கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.களின் அதிக ஆதரவைப் பெற்று இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமராகப் போட்டி இன்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையை உயர்த்த திட்டம், மினி - பட்ஜெட் சர்ச்சை போன்ற காரணங்களால் பிரதமர் லிஸ் டிரஸ் கடந்த 20ம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தார்.
தற்போது, நாட்டின் பிரதமராக பொறுப்புக்கு வரவிருக்கும் ரிஷி சுனக் பிரித்தானிய பொருளாதாரத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நிதிநிலை அறிக்கை
மேலும், ஏற்கனவே திட்டமிட்டபடி எதிர்வரும் 31ம் திகதி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இருப்பினும், புதிய பிரதமரான ரிஷி சுனக் தமது நிதியமைச்சருடன் இணைந்து கடுமையான முடிவுகளை முன்னெடுப்பார் என்றே தெரியவந்துள்ளது.
மேலும், புதிய நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுவாரா அல்லது தற்போதைய நிதியமைச்சரான ஜெர்மி ஹன்ட் தொடர்வாரா என்பதும் உறுதியாகவில்லை.
மூன்று முக்கிய முடிவுகள்
இந்த நிலையில், பொருளாதாரம் தொடர்பில் இந்த வாரம் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணவீக்கம் அதிகரித்துவரும் நிலையில், யுனிவர்சல் கிரெடிட் பயனாளர்கள் உட்பட மில்லியன் கணக்கானோர் தங்களுக்கான நிதியுதவி அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாக ஒவ்வொரு ஏப்ரல் மாதமும் யுனிவர்சல் கிரெடிட் பயனாளர்களுக்கான நிதியுதவி அதிகரிக்கப்பட்டே வந்துள்ளது.
ஓய்வூதியதாரர்கள்
இரண்டாவதாக, மில்லியன் கணக்கான ஓய்வூதியதாரர்கள் பணவீக்கத்திற்கு ஏற்ப தங்கள் கொடுப்பனவுகள் உயருமா என்ற கவலையில் உள்ளனர்.
45 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்த லிஸ் ட்ரஸ் அரசாங்கம் ஓய்வூதியதாரர்களுக்கு கொடுப்பனவுகளை அதிகரிக்க மறுத்தது.
ஆனால் ரிஷி சுனக் இந்த விவகாரத்தில் கண்டிப்பாக முக்கிய முடிவெடுப்பார் என்றே மில்லியன் கணக்கான ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நேஷனல் இன்சூரன்ஸ் திட்டம்
மூன்றாவதாக, நேஷனல் இன்சூரன்ஸ் திட்டத்தில் மாறுதல் கொண்டுவரப்பட்டால், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஆண்டுக்கு 330 பவுண்டுகள் வரையில் சராசரியாக பலன்களைப் பெறுவார்கள்.
ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்கு வந்த தேசிய காப்பீட்டில் 1.25 சதவீத புள்ளிகள் உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் ஹன்ட் தெரிவித்துள்ளார்.
இதனால் பிரித்தானியாவில் உள்ள சுமார் 28 மில்லியன் தொழிலாளர்கள் ஆண்டுக்கு சராசரியாக 330 பவுண்டுகள் ஆதாயம் பெறுவார்கள்.
இருப்பினும், ஆண்டுக்கு 12,570 பவுண்டுகளுக்கும் குறைவாக வருவாய் ஈட்டும் தொழிலாளர்களுக்கு இதனால் ஆதாயம் ஏதுமில்லை என்றே தெரியவந்துள்ளது.