ரஷ்யாவின் எண்ணெய் கப்பலை துரத்தி பிடித்த பிரித்தானியா! நடுக்கடலில் அதிரடி..
உக்ரைன் மீதான போருக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்காக, சர்வதேச தடைகளை மீறி மசகு எண்ணெய் கொண்டு சென்ற ரஷ்யாவின் ‘நிழல் கப்பல்’ ஒன்றை பிரித்தானிய ஆயுதப் படைகள் இங்கிலீஷ் செனல் பகுதியில் அதிரடியாகச் சிறைபிடித்துள்ளன.
‘ஸ்மிர்டோஸ்’ என்ற பெயருடைய இந்த எண்ணெய் கொள்கலன் கப்பல், ரஷ்யாவின் உஸ்ட்-லுகா துறைமுகத்தில் இருந்து எகிப்து மற்றும் இந்தியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது பிரித்தானிய பிரதமரின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதிரடியாகச் சிறைபிடிப்பு
சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கையில், பிரித்தானிய ராயல் மரைன் கமாண்டோக்கள் மற்றும் தேசிய குற்றவியல் முகமை (NCA) அதிகாரிகள் சினூக் ஹெலிகொப்டர்கள் மற்றும் கடற்படைப் போர்க்கப்பல்களின் உதவியுடன் கப்பலுக்குள் புகுந்து அதனைக் கைப்பற்றினர்.

சமீபத்தில் கேமரூன் நாட்டின் கப்பல் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டதால் எந்தவொரு நாட்டின் கொடியுமின்றி பயணித்த இக்கப்பல், இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையான டோர்செட் அருகே பாதுகாப்பாக நங்கூரமிடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த வெற்றிகரமான நடவடிக்கை குறித்துப் பேசிய பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர், இது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உக்ரைன் போருக்குக் நிதி வழங்குபவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றும், ரஷ்யாவின் வருவாயை முடக்கும் ஒரு பலத்த அடி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி பிரித்தானியாவுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளதோடு, ஐரோப்பிய நாடுகள் இத்தகைய கப்பல்களைப் பறிமுதல் செய்ய வலுவான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.