காபூல் தற்கொலை குண்டு தாக்குதல்! - குழந்தை உள்ளிட் மூன்று பிரித்தானியர்கள் பலி
காபூல் விமான நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் மற்றும் பிரித்தானிய நாட்டவரின் குழந்தை உயிரிழந்துள்ளதாக வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த தற்கொலை குண்டு தாக்குதலில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.
கோலைத்தனமான பயங்கரவாதிகளின் தாக்குதலில் பிரித்தானிய நாட்டவர்கள் கொல்லப்பட்டனர் என்பது ஒரு சோகமான சம்பவம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 95 பேர் கொல்லப்பட்டதாகவும், உயிரிழப்புகளினால் தாம் வருத்தமடைந்துள்ளதாகவும் டொமினிக் ராப் கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
“நேற்றைய வெறுக்கத்தக்க தாக்குதல் ஆப்கானிஸ்தானில் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்நிலையில், அங்கிருந்து மக்களை வெளியேற்ற நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்.
அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவை வழங்குகிறோம்” எனவும், தீவிரவாதிகள் குறித்து தாம் அச்சமடையப் போவதில்லை” எனவும் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காபூல் விமான நிலையத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் அமெரிக்கா, ஆகஸ்ட் 31ம் திகதி தனது படைகளை மீள அழைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இடம்பெற்ற இந்த மோசமான தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படும் குழு இருப்பதாக நம்பப்படுகின்றது.
உயிரிழந்தவர்களில் 13 அமெரிக்க படை வீரர்களும் அடங்குவதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.