பசுமை மற்றும் ஆபத்தான நாடுகளின் பட்டியலை வெளியிட்டது பிரித்தானிய அரசு!
கோவிட் தொற்று தொடர்பில் ஆபத்து மற்றும் பசுமை பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள நாடுகள் குறித்து அறிவிப்பை பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ளது.
பசுமை பட்டியலில் இடம்பெற்ற நாடுகளில் இருந்து பிரித்தானிய வருபவர்களுக்கு தனிமைப்படுத்துதல் கிடையாது. எனினும், அவர்கள் இரண்டு நாட்களுக்கு பிறகு பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஆபத்தான பட்டியலில் இடம்பிடித்துள்ள நாடுகளில் இருந்து பிரித்தானியா வருபவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்று இருந்தால் அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் கிடையாது.
எனினும், நாடு திரும்புவதற்கு 3 நாள் முன்னதாக பி.சி.ஆர் சோதனை செய்திருக்க வேண்டும். பிரித்தானியா வந்த பின்னர் இரண்டாம் நாள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட இடங்கள் செல்வதற்கு முழுமையாக தடுப்பூசி போடாத பயணிகள் புறப்படுவதற்கு முந்தைய சோதனை, பிரித்தானியாவில் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் மற்றும் 2 மற்றும் நாள் 8-ம் நாள் பரிசோதனை செய்ய வேண்டும்.
அந்த வகையில், அங்குய்லா, ஆண்டிகுவா மற்றும் பார்புடா, அவுஸ்திரேலியா, பார்படாஸ், பெர்முடா, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், புரூனே, கேமன் தீவுகள், டொமினிகா, பால்க்லாந்து தீவுகள், ஜிப்ரால்டர், கிரெனடா, ஐஸ்லாந்து, இஸ்ரேல் மற்றும் ஜெருசலேம், மடெய்ரா, மால்டா, மான்ட்செரட், நியூசிலாந்து, சிங்கப்பூர், தெற்கு ஜோர்ஜியா, தெற்கு சாண்ட்விச் தீவுகள், டர்க்ஸ் மற்றும் கெய்காஸ் தீவுகள் ஆகியவை பசுமை பட்டியலில் இடம்பிடித்த நாடுகளாகும்.
ஆஸ்திரியா, பஹாமாஸ், பெல்ஜியம், கனடா, சீனா, குரோசியா, சைப்ரஸ், பிரான்ஸ், கிரீஸ், இந்தோனேசியா, இத்தாலி, மெக்சிகோ, போர்ச்சுக்கல், சவுதி அரேபியா, ஸ்பெயின், தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்டவை ஆபத்தான பட்டியலில் உள்ள நாடுகளாகும்.
ஆபத்து அல்லது பசுமை பட்டியல்களில் இல்லாத அனைத்து நாடுகளும் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட நாடுகளாகும்.
இதன்படி, பிரித்தானிய அல்லது ஐரிஷ் பிரஜைகள் அல்லது இங்கிலாந்தின் குடியிருப்பு உரிமை உள்ளவர்கள் மட்டுமே சிவப்பு பட்டியல் நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.