மலையக மக்களை இலங்கையின் அர்த்தமுள்ள குடிகளாக்கும் பொறுப்பு பிரிட்டனுக்கு உண்டு: திலகர்
இரு நூறு வருடங்களாக இலங்கையில் (Sri Lanka) மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படும் மலையகத் தமிழ் மக்களை, இலங்கையின் அர்த்தமுள்ள குடிகளாக்குவதில் பிரித்தானியாவும் பங்களிப்புச் செய்ய வேண்டியுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தியதாக மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக்கும் (Andrew Patrick) மலையக அரசியல் அரங்கத்துக்கும் இடையேயான சந்திப்பு அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ள நிலையில் மலையக அரசியல் அரங்கம் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைப் பிரஜாவுரிமை
குறித்த அறிக்கையில் மேலும், “மலையகத் தமிழ் மக்கள், இலங்கையில் தமது 200 ஆண்டு நிறைவை அனுஷ்டிக்கும் இந்த கால கட்டத்தில் பிரித்தானியாவுக்கான புதிய இலங்கைத் தூதுவராகிய நீங்கள் உங்களது இல்லத்துக்கு எம்மை அழைத்தமை வரவேற்கத்தக்கது.
ஏனெனில் 200 ஆண்டுகால இலங்கை வாழ்வைத் தொடக்கி வைத்தவர்கள் நீங்களே. நீங்கள் எங்களை அழைத்து வந்த நோக்கம் பொருளாதார அடிப்படையிலானது என்ற போதும், இலங்கைக்கு சுதந்திரம் வழங்குவதற்கு முன்னதாகவே எங்களை அரசியல் சமூகமாக ஏற்று அங்கீகரித்து இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கியதை நன்றியுடன் நினைவுகூருகின்றோம்.
எனினும், இலங்கை சுதந்திரம் அடைந்ததோடு எங்களது இலங்கைப் பிரஜாவுரிமையை எங்களது சுதேச அரசாங்கம் அதனைப் பறித்தது என்பதையும் வருத்தத்துடன் நினைவு படுத்த வேண்டியவர்களாக உள்ளோம்.
எமது மலையக அரசியல் அரங்கம் இந்த 200 ஆண்டு கால போராட்ட வாழ்வின் அடிப்படையில் அடுத்த 100 ஆண்டுகளுக்கான அத்திவாரத்தை எவ்வாறு இடுவது? எமக்கு மறுக்கப்பட்ட அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறை ஒன்றை அரசியல் அணுகுமுறையாக எவ்வாறு அணுகுவது எனும் உரையாடல் வெளியை அரங்கத்தின் ஊடே உருவாக்கினோம்.
24 தலைப்புகளில் இரண்டு ஆண்டுகளாக எங்களது ஆய்வாளர்களைக் கொண்டே ஆய்வு செய்து ஆவணமாக்கியுள்ளோம். இனி அவற்றை அரச கொள்கை வகுப்பாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் வழிமுறைகளை ஆராய்ந்து வருகின்றோம்.
மலையக அரசியல் அரங்கம்
இலங்கையில் எங்களது இன்றைய நிலைமைக்கு இலங்கை அரசு மாத்திரம் இன்றி இந்திய, பிரித்தானிய அரசுகளும் வகை கூற வேண்டும் என நாங்கள் எண்ணுகின்றோம். ஆனால், இந்த இரண்டு அரசாங்கங்களும் கட்புலனாகும் கட்டுமான அபிவிருத்திக்குக் காட்டும் ஆர்வத்தை கல்வி சார்ந்து காட்டுவதாக எங்களுக்குத் தெரியவில்லை.
எது எவ்வாறெனினும் மலையக மக்களை காணி உரிமையற்ற மக்களாகவே 200 வருடங்கள் வைத்து இருக்கும் இலங்கை அரசு 225 - 250 ஆண்டு காலம் இவ்வாறே இழுத்துச் சென்று விடுமானால் இந்தச் சமூகம் சிதறுண்ட சமூகமாக, இன அடையாளம் இழந்த சமூகமாக மாற்றப்படும் அபாயமே உள்ளது.
எனவேதான் தெற்கே சிங்கள மக்களைப் போல் மலையகப் பெருந்தோட்ட மக்களையும் சிறு தோட்ட உடைமையாளர்களாகும் முதன்மைக் குறிக்கோளுடன் மலையக அரசியல் அரங்கத்தின் அரசியல் நகர்வுகளை முன்வைக்கின்றோம்.
தற்போது அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் உறுமய காணி வழங்கலில் இது வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்றது. காணி உரிமையை முழுமையாகப் பெற்றுக்கொள்ளும்போதே மலையகத் தமிழ் மக்கள் இலங்கையில் அர்த்தமுள்ள பிரஜை எனும் அந்தஸ்த்தைப் பெறுவர்.
அதற்காகவே நாங்கள் போராடுகின்றோம். அதற்கு எங்களை இந்த நாட்டுக்கு
அழைத்து வந்த பிரித்தானியாவுக்கும் பொறுப்பு இருக்கின்றது. அதனை
நிறைவேற்றுவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |