நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளை கொண்டு வருவேன்:ரோஹன விஜேவீரவின் புதல்வர்
இலங்கை நாடாளுமன்றத்தில் மேல் மற்றும் கீழ் என இரண்டு சபைகளை ஏற்படுத்தி, நாட்டில் அறிஜீவிகளை கொண்ட மேல் சபையை நடைமுறைக்கு கொண்டு வரப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) ஸ்தாபகர் ரோஹன விஜேவீரவின் (Rohana wijeweera) புதல்வர் உவிந்து விஜேவீர (Uvindu Wijeweera) தெரிவித்துள்ளார்.
நாட்டின் நாடாளுமன்ற முறையை தமது ஆட்சியின் கீழ் முற்றாக மாற்றியமைக்க எண்ணியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டின் நாடாளுமன்றம் இரட்டை முறைமையை கொண்ட நாடாளுமன்றமாக இருக்க வேண்டும்.
நாட்டின் கல்விமான்கள், புத்திஜீவிகள், அரச சேவையில் இருந்து ஓய்வுபெறுவோர் நாடாளுமன்ற பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட வேண்டும். மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறு ஒரு அணியாக இருப்பார்கள்.
இவர்கள் எப்படியான தீர்மானங்களை நாடாளுமன்றத்திற்குள் எடுத்தாலும் மேல் சபையில் இருக்கும் புத்திஜீவிகள் அதற்கு அனுமதி வழங்கிய பின்னர், நாட்டுக்குள் அவற்றை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் உவிந்து விஜேவீர குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் தலைமுறை அமைப்பின் மாத்தளை மாவட்ட கூட்டம் நாவுல நகரில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றதுடன் அதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே உவிந்து விஜேவீர இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.