ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை! - மாவட்ட ரீதியாக நிறுவப்படவுள்ளன இலஞ்ச ஊழல் விசாரணை அலுவலகங்கள்
இலங்கையில் ஊழலை ஒழிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையாக, தற்போது கொழும்பை மையமாக கொண்டு இயங்கும் இலஞ்ச, ஊழல் பற்றிய சாத்தல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவை மாவட்ட மட்டத்திற்கு அதிகாரப்பகிர்வு செய்ய அரசு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட 'ஆளுமைக்கான செயற்றிட்டம் - 2026' அறிக்கையின்படி இந்த முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சிஐடி பிரிவுக்குள் இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்! குற்றப்புலனாய்வு அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை
நிறுவப்படவுள்ளன 24 அலுவலகங்கள்
இதன்படி, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு பிராந்திய அலுவலகம் வீதம் மொத்தம் 24 அலுவலகங்கள் நிறுவப்படவுள்ளன.

இந்த அலுவலகங்களுக்கான அதிகார வரம்புகள், சட்ட ரீதியான பொறுப்புகள், உத்தியோகத்தர்களின் படிநிலை அமைப்புகள் உள்ளிட்ட விரிவான அதிகாரப் பகிர்வுத் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பான விதிமுறைகளை நீதி அமைச்சு இந்த ஆண்டு டிசம்பருக்குள் வெளியிடும். இதற்காகப் பிரதம நீதியரசர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் ஆகியோருடன் கலந்தாலோசிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னர், 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தப் பிராந்திய அலுவலகங்கள் உத்தியோகபூர்வமாகத் தமது பணிகளை ஆரம்பிக்கவுள்ளன.
மறுசீரமைப்புகள்
எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் பாரிய மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
உத்தியோகத்தர்களின் நியமனம், பதவி உயர்வு, ஊதியம் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான புதிய விதிமுறைகள் வர்த்தமானியில் வெளியிடப்படும்.

குறிப்பாக, ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் நடத்தை விதிகளை மீறினால் அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய கடுமையான நடவடிக்கைகள் குறித்தும் புதிய விதிகள் வகுக்கப்படவுள்ளன.
ஆணைக்குழுவின் ஊழியர்களுக்காக விசேட 'விருப்ப ஓய்வுத் திட்டம்' ஒன்றையும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், நீதி அமைச்சுடன் கலந்தாலோசித்து இந்தத் திட்டம் இறுதி செய்யப்படவுள்ளது.