கபில் தேவின் 36 வருட உலக சாதனை முறியடிப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் கபில் தேவின் 36 வருட உலக சாதனையை நெதர்லாந்து கிரிக்கெட் அணித்தலைவர் முறியடித்துள்ளார்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
அதிகபட்ச ஓட்டங்கள்
நியூசிலாந்துக்கு எதிராக 36 வருடங்களுக்கு முன், 1987ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் பெங்களூர் மைதானத்தில் 7ஆவது இடத்தில் களமிறங்கிய அணித்தலைவர் கபில் தேவ் 58 ஓட்டங்களை பெற்றார்.
இதுவே 7 ஆவது இடத்தில் களமிறங்கிய ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.
இந்த நிலையில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 7 ஆவது இடத்தில் களமிறங்கிய நெதர்லாந்து அணித் தலைவர் ஸ்கொட் எட்வேட்ஸ் அதிரடியாக 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட, 69 பந்துகளில் 78 ஓட்டங்களை குவித்துள்ளார்.
முறியடிக்கப்பட்ட சாதனை
இதன்மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் 7ஆவது இடத்தில் களமிறங்கி, அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்த அணித்தலைவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நெதர்லாந்து அணி அபாரமாக விளையாடி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.