நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விருதை அர்ப்பணிக்கிறேன்: முஜிபுர் ரஹ்மான்
எங்கள் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து தற்பொழுது வீடு திரும்பி இருக்கும் மக்களுக்கு இந்த விருதை நான் சமர்ப்பிக்கிறேன் என ஆப்கானிஸ்தான் அணி வீரர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 69 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (15.10.2023) இடம்பெற்றது.
இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை பெற்றபோதே முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி
இந்தியாவின் அருண்ஜேட்லி மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 284 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் ரகமதுல்லா கபாஸ் அதிகபட்சமாக 80 ஓட்டங்களை பெற்றதுடன் க்ராம் அலிக்கில் 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் அதில் ரஸித் 3 விக்கெட்டுக்களையும் மார்க் உட் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதன்படி இங்கிலாந்து அணிக்கு 285 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
முஜிபுர் ரஹ்மான்
இதன்பின்னர் 285 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 40.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 215 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஹெரி புருக் அதிகபட்சமாக 66 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முஜிபுர் ரஹ்மான் மற்றும் ரசித் கான் 3 விக்கெட்டுக்களையும் மொகமட் நபி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய முஜிபுர் ரஹ்மான் 16 பந்துகளில் 28 ஓட்டங்களையும் பந்துவீச்சில் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியதன் மூலம் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் கூறுகையில், உலகக் கோப்பைக்கு நடப்பு சாம்பியனை வீழ்த்தியதை பெருமையான தருணமாக கருதுகின்றோம்.
இது ஒட்டுமொத்த அணிக்கும் பெரிய சாதனை. நாங்கள் கடினமாக உழைத்து வந்ததற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு ஆகும்.
மேலும், எங்கள் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து தற்பொழுது வீடு திரும்பி இருக்கும் மக்களுக்கு இந்த விருதை நான் சமர்ப்பிக்கிறேன்” என்றார்.