வவுனியாவில் காணாமல் போன இளைஞன் தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்பு
வவுனியாவில் கடந்த ஜனவரி 27 ஆம் திகதி காணாமல்போன இளைஞன் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சில சந்தேக நபர்கள் மற்றும் அவரது நண்பர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வவுனியா குருமன்காட்டிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு சென்ற பாலகிருஷ்ணன் நிரேஸ் என்ற இளைஞன் காணாமல் போயுள்ளதாக அவரது தாயரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும் இதன் உண்மைத் தகவல்களை காணாமல் போன இளைஞனின் தாயார் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களின் முன் தோன்றி கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவரது கருத்துக்கள் குறித்து பொலிஸாரிடம் வினவியபோது ,
குறித்த வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இளைஞன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த காட்சிகள் சி.சி.ரிவி காணொளியில் பதிவாகியுள்ளது.
எனினும் குறித்த வர்த்தக நிலையத்திற்குள் சென்றமை காணப்படவில்லை . அப்படியே வெளியே சென்றதையே காணமுடிகின்றது அது தொடர்பாக தொடர்ந்தும் ஆராயப்பட்டு வருகின்றது.
காணாமல் போன இiளஞரின் நண்பர்கள் மற்றும் சந்தேக நபர்கள் சிலரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது . அவரது தொலைபேசி இலக்கம் மற்றும் அடையாள அட்டை இலக்கம் என்பன கண்காணிக்கப்பட்டு வருகின்றன .
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



