இத்தாலியை உலுக்கிய மருத்துவ அஜாக்கிரதை : 2 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி!
இத்தாலியில் உறைந்த நிலையில் கொண்டு வரப்பட்ட இதயத்தைப் பொருத்தப்பட்ட இரண்டு வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த டொமினிகோ என்ற சிறுவன், கடந்த டிசம்பர் மாதம் நேப்பில்ஸ் நகரில் உள்ள மொனால்டி மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
தொற்றால் பாதிக்கப்பட்ட இதயம்
ஆனால், அந்த இதயம் சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போல்சானோவிலிருந்து கொண்டுவரப்பட்டபோது, உலர்ந்த பனிக்கட்டியுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு 'பனிப்புண்' ஏற்பட்டிருந்ததமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

முறையற்ற போக்குவரத்து மற்றும் வெப்பநிலையைக் கண்காணிக்கத் தேவையான கருவிகள் இல்லாத காரணத்தால் இதயம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து, அந்நாட்டு அரச சட்டத்தரணிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் ஆறு மருத்துவப் பணியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு மாதங்களாக உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் போராடி வந்த சிறுவன், நேற்று(21.02.2026) காலை உயிரிழந்ததாக அவனது குடும்ப சட்டத்தரணி பிரான்செஸ்கோ பெட்ரூசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மருத்துவ குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் திட்டம்
சிறுவனின் மரணத்திற்கு இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதன்படி, "இந்தக் கொடூரமான சம்பவம் குறித்து உரிய அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவார்கள் என்று நான் நம்புகிறேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவனின் தாய் பாட்ரிசியா மெர்கோலினோ, தனது மகனின் நினைவாக ஒரு அறக்கட்டளையைத் தொடங்கப்போவதாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இந்த அறக்கட்டளை மருத்துவக் குறைபாடுகள் மற்றும் அஜாக்கிரதையால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவும் நோக்கில் செயல்படும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.