இலங்கைக்கு சர்வதேச ரீதியாக கிடைக்கவுள்ள 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள்
குறைந்தபட்சம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விரிவான நிதி வசதியின் கீழ் இந்த கடனைப் பெற திட்டமிடப்பட்டுள்ளதென ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இம்மாதம் முதல் வாரத்தில் மற்றொரு சுற்று தொழில்நுட்ப கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
3 பில்லியன் அமெரிக்க டொலர்
ஜூன் மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கைக்கு வருமென நம்புவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு கட்டமைக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அண்மையில் தெரிவித்திருந்தது.
வரித் திருத்தம்
அதற்கமைய, இலங்கையுடன் விரிவான சீர்திருத்தப் பொதி தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த நம்புவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
வருவாயை அதிகரிக்க சர்வதேச நாணய நிதியம் அண்மையில் வரிகளை திருத்தவும் வற் வரியை அதிகரிக்கவும் ஆலோசனைகளை முன்வைத்திருந்தது.
அதற்கமைய, அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வற் வரியை 8 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்க நிதியமைச்சு நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.