இந்தியாவில் 41 விமான நிலையங்களுக்கு வெடி குண்டு அச்சுறுத்தல்: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
மும்பை - சென்னை விமானத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட 18 நாட்களுக்குப் பின்னர், தற்போது மீண்டும் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு வெடிகுண்டு அச்சுறுத்தல் வந்ததால், நேற்று இரவு 10:24 மணிக்கு விமானம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டு சோதனை
இதன்போது விமானத்தில் இருந்த 196 பயணிகளும் 7 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து விமானம் தனிமைப்படுத்தப்பட்டு, சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று மாத்திரம் இந்தியா முழுவதும் உள்ள 41 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல், மின்னஞ்சல்கள் கிடைத்துள்ளன. எனினும் அனைத்து அச்சுறுத்தல்கள் மின்னஞ்சல்களும் போலியானவை என நிரூபிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எல்லா விமான நிலையங்களுக்கும் வந்த மின்னஞ்சல்கள் கிட்டத்தட்ட ஒரே செய்தியைக் கொண்டிருந்தன.
அந்த செய்தியில், "ஹலோ, விமான நிலையத்தில் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. விரைவில் வெடிகுண்டுகள் வெடிக்கும். நீங்கள் அனைவரும் இறந்துவிடுவீர்கள்." என்று குறிப்பிடப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பொலிஸார்
"KNR" என்ற இணையக் குழு இந்த அச்சுறுத்தல் மின்னஞ்சல்களுக்குப் பின்னால் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்களில் மும்பையில் உள்ள 60 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் கிடைத்துள்ளன.
இதில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் அடங்குகின்றன.
இதன்படி இந்திய பொலிஸாரின் கூற்றுப்படி, மின்னஞ்சல்கள்; கிடைத்தவுடன், மருத்துவமனைகள் உடனடியாக உள்ளூர் பாதுகாப்புதுறைக்கு தகவல் வழங்கி, முழுமையான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |