கட்டுநாயக்க வந்த விமானத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்
கட்டாரிலிருந்து இலங்கை நோக்கிப் பயணித்த விமானத்தில் நான்கு தற்கொலை குண்டுதாரிகள் பயணிப்பதாகவும் அவர்கள் விமானத்தை வெடிக்கச் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் வழங்கப்பட்ட தகவல்களினால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
மின் அஞ்சல் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த விமானத்தில் அவ்வாறான எந்த ஒரு குண்டும் இருக்கவில்லை என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தோஹாவில் அமைந்துள்ள ஹமார்ட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 1. 44 மணியளவில் குறித்த விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமானத்தில் குண்டு காணப்படுவதாக மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த விமானத்தில் குண்டுகளை வெடிக்க செய்து தற்கொலை தாக்குதல் நடத்த நான்கு விமான பயணிகள் திட்டமிட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மின்னஞ்சல் தகவலை அடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விமானத்தில் 245 பயணிகளும் 10 விமான பணியாளர்களும் பயணித்துள்ளனர்.
விமானம் தரையிறக்கப்பட்டதன் பின்னர் விமானப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த விமானத்தில் குண்டோ அல்லது சந்தேகத்திற்கு இடமான பொருட்களோ இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.