நுவரெலியாவில் வனப்பகுதியில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்
நுவரெலியாவில் டொப்பாஸ் வனப்பகுதியில் இன்று (29) காலை ஒரு ஆண் நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது,
இளைஞனின் சடலம் மீட்பு
கண்டெடுக்கப்பட்டவர் நுவரெலியாவின் சாந்திபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதான ரோஷன் லக்மால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் இந்தமாதம் 8 ஆம் திகதி முதல் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்ததாகவும், இதுகுறித்து அவரது குடும்பத்தினர் நுவரெலியா பொலிஸில் காணாமற்போனவர் தொடர்பான முறைப்பாடு ஒன்றை முன்வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை டொப்பாஸ் வனப்பகுதியில் விறகு வெட்டச் சென்ற தொழிலாளர்கள் குழுவொன்று வனப்பகுதியில் ஒரு சடலம் இருப்பதை கண்டறிந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, நுவரெலியா பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.
பின்னர், சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அவரது தந்தையால் அடையாளம் காணப்பட்டதாகவும், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நுவரெலியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புகைப்படங்கள்- திவாகரன்