மன்னாரில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு: கொலை என சந்தேகம் (Video)
மன்னார்- செல்வ நகர் கிராம சேவையாளர் பிரிவில் மக்கள் நடமாட்டம் இல்லாத குடிசை வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய குடும்பஸ்தரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சடலம் கடந்த செவ்வாய்க்கிழமை (11.07.2023) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் செல்வநகர் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள குடிசை வீட்டின் உரிமையாளர் வீட்டை பார்வையிட சுமார் ஒரு மாதத்தின் பின்னர் கடந்த (11.07.2023) ஆம் திகதி வருகை தந்து தனது வீட்டை பார்வையிட்டுள்ளார்.
3 பிள்ளைகளின் தந்தை
இந்த நிலையில் குறித்த வீட்டில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த வீட்டின் உரிமையாளர் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த சடலம் செல்வ நகரைச் சேர்ந்த காணாமல் போன இரட்ணசிங்கம் கஜேந்திரன் (வயது-35) என்ற 3 பிள்ளைகளின் தந்தை என அவரது உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டது.
சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் மன்னார் பொலிஸார் மற்றும் தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளையும் தடயங்களையும் ஆராய்ந்தனர்.
இந்த நிலையில் மன்னார் நீதவான் மற்றும் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டதோடு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க பட்ட பின் சடலத்தை இந்து முறைப்படி தகனம் செய்யாமல் அடக்கம் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் பகுதியில் சில நபர்களுடன் சேர்ந்து மாடு ஒன்றை இறைச்சிக்காக வெட்டியுள்ளார் என்றதன் அடிப்படையில் குழு ஒன்றினால் தேடப்பட்டு வந்ததாகவும், தேடப்பட்டு வந்தவர்களில் மேலும் சிலர் குறித்த குழுக்களால் தாக்கப்பட்டு மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டதன் பின்னர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மாட்டுக்கான நஷ்ட ஈட்டை மாட்டு உரிமையாளருக்கு வழங்கியுள்ளனர்.
கொலை மிரட்டல்
மேலும் இறந்து போன இரட்ணசிங்கம் கஜேந்திரன் தலைமறைவாக இருந்ததன் காரணத்தால் குறித்த குழுக்களால் தொடர்ந்தும் தேடப்பட்டு வந்ததுடன் அவரது வீட்டிற்கு சென்று அவரது மனைவியை அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவரது மனைவியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸார் பலரிடம் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து சடலம் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம்(13.07.2023) அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
எனினும் குறித்த இளம் குடும்பஸ்தரின் வீடு தேடிச் சென்று அவருடைய மனைவிக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்களே கொலை செய்துள்ளதாகவும் இவ்விடயத்தில் பொலிஸார் அசமந்த போக்குடன் செயல்படுவதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |