மட்டக்களப்பில் தோணி கவிழ்ந்து காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தோணி கவிழ்ந்து காணாமல்போன இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது நேற்று(14.01.2024) மாலை மீனவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதியில் இளைஞர் ஒருவர் தோணியில் வலைவீசி மீன்பிடித்துக்கொண்டிருந்த போது வலை வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்ட போது தோணி கவிழ்ந்துள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது நீரில் குறித்த இளைஞன் அடித்துச் செல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் இறுதியாண்டு கல்வி கற்கும் கோட்டைக்கல்லாறை சேர்ந்த 25வயதுடைய சுசிதரன் தனூஷன் என்ற மாணவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தற்போது வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக பெரியகல்லாறில் முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ள நிலையில் ஆற்றின் நீரோட்டம் அதிகமாக இருப்பதன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |