மன்னார் பகுதியில் உலர்ந்த மஞ்சள் மூடைகளுடன் வள்ளங்கள் மற்றும் வாகனம் மீட்பு
மன்னார் பெரியகடை கடற்கரை கலப்பு பகுதியில் சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர்ந்த மஞ்சள் மூடைகளை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
குறித்த மஞ்சள் மூடைகள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன.
மன்னார் இராணுவ புலனாய்வு பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட இராணுவத்தினர் மன்னார் பெரியகடை கடற்கரை கலப்புப் பகுதியில் வைத்து சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 18 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 672 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மூடைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வள்ளங்கள் மூன்றும் மற்றும் பட்டா ரக வாகனமும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த பொருட்கள் இன்று (8) காலை 9 மணியளவில் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


