இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச்செல்ல உதவிய நபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு தப்பிச்செல்ல படகு வழங்கி உதவிய நபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபரை 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம நேற்று (08) உத்தரவிட்டுள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் 47 ஆவது சந்தேகநபர்
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் 30 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சந்தேகநபரான ஜேசுதாசன் செல்வசேத் எனப்படும் ‘பலசி’என்பவரை கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தியபோது சமர்ப்பித்த உண்மைகளைக் கருத்தில் கொண்ட பின்னர், நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேகநபர் 47 ஆவது சந்தேகநபராக பெயரிடப்படுவார் என்று கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு சந்தேகநபர் தெரிந்தே ஏற்பாடு செய்ததாகவும், செவ்வந்தி இந்தியா வந்தடைந்த பிறகு, படகில் ஆதாரமாக இருந்த ஜிபிஎஸ் கருவியை அவர் அழித்துவிட்டதாகவும் கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டை விட்டு வெளியேற சந்தேகநபர் உதவியுள்ளதாகவும், இந்தியாவுக்கு செல்வதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் வசூலித்ததாகவும் தெரியவந்ததாக குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது.
தடுப்புக்காவல் விசாரணை
இஷாரா செவ்வந்தி சுமார் 10 மாதங்கள் வரை தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போது எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் பெப்ரவரி 19 ஆம் திகதி கொழும்பு - புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்ற அறையில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதன்போது, கொலைக்காக பயன்படுத்திய துப்பாக்கியை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டுவந்தவர் இஷாரா செவ்வந்தி என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த கொலைக்குப் பின்னர் சில மாதங்கள் கழித்து அவர் நேபாளத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சரின் செயலாளர் கொலை! வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு