அமெரிக்காவில் இருந்து 7.2 லட்சத்திற்கும் அதிகமான BMW கார்கள் மீளழைப்பு
அமெரிக்காவில் தீ விபத்து ஏற்படும் அபாயம் காரணமாக 720,796 BMW வாகனங்களை மீளழைக்க ஜெர்மனியின் BMW நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
2012 முதல் 2018ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட பல்வேறு BMW மொடல்களில் இந்தப் பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது.
வாகனத்தின் நீர் பம்பில் (Water Pump) உள்ள மின் இணைப்பான் பழுதடைவதால், அதற்குள் ஈரப்பதம் புகுந்து மின்கசிவு ஏற்படக்கூடும்.
இதனால் அரிதான சந்தர்ப்பங்களில் வாகனத்தில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) தெரிவித்துள்ளது.
அறிவிப்புக் கடிதங்கள் அனுப்பப்படும்
இதன்படி, மீளழைக்கப்படும் வாகனங்கள்:
◾ BMW 228i மற்றும் 228xi (2014–2016)
◾ BMW 328i மற்றும் 328xi (2012–2016)
◾ BMW 428i மற்றும் 428xi (2014–2016)
◾ BMW 528i மற்றும் 528xi (2012–2016)
◾ BMW X1 (2012–2015)
◾ BMW X3 (2013–2017)
◾ BMW X4 (2015–2018)
◾ BMW X5 (2016–2018)
◾ BMW Z4 (2012–2016)

இந்த நிலையில், குறித்த வாகனங்களின் உரிமையாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கட்டடங்கள் மற்றும் பிற அமைப்புகளிலிருந்து விலகி திறந்தவெளியில் வாகனங்களை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மீளழைப்பு 2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முன்னைய மீளழைப்புடன் தொடர்புடையது. எனவே, ஏற்கனவே பழுதுபார்க்கப்பட்ட வாகனங்களுக்கும் மீண்டும் திருத்தப் பணிகள் தேவைப்படலாம். இதற்கான தீர்வை BMW நிறுவனம் தற்போது உருவாக்கி வருகிறது.
பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் அறிவிப்புக் கடிதங்கள் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.