யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற குருதிக்கொடையாளர் கௌரவிப்பு நிகழ்வு
யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் உலக குருதிக்கொடையாளர்கள் தினத்தினை முன்னிட்டு குருதிக்கொடையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
யாழ். தாதியர் பயிற்சிக் கல்லூரியில் 23.06.2024 அன்றைய நாளில் காலை ஆரம்பமான நிகழ்வில் யாழ் மாவட்டத்தில் உள்ள பிராந்திய இரத்த வங்கிகளிலும் யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியிலும் தொடர்ச்சியாக குருதிக்கொடை செய்து வரும் குருதிக்கொடையாளர்கள் கௌரவிப்பிற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
உலக குருதிக்கொடையாளர் தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கௌரவிப்பு நிகழ்வு பிரதான இரு பிரிவுகளின் கீழ் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டு இருந்தது.
குருதிக்கொடை நிகழ்வுகளை ஏற்பாடு செய்வோரை கௌரவித்தல் மற்றும் குருதிக்கொடையாளர்களை கௌரவித்தல் என்ற வகையில் அந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கௌரவிப்பு நிகழ்வு
உலக குருதிக்கொடையாளர் நிகழ்வில் முதலிலில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வாக குருத்திக்கொடை நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தவர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து குருதிக்கொடையாளர்கள் கௌரவிக்கப்பட்டு இருந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து அதிக தடவைகள் குருதிக்கொடை செய்திருந்த குருதிக்கொடையாளர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
கௌரவிப்பு நிகழ்வுகளிடையே கலை நிகழ்ச்சிகளும் விருந்தினர்களாக கலந்து கொண்டவர்களின் உரைகளும் நடைபெற்றிருந்தன.
சான்றிதழும் பரிசுப்பொருளும் கௌரவிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.
குளிர்பானமும் சிற்றுண்டிகளும்
குளிர்பானமும் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டிருந்ததோடு மதிய உணவும் வழங்கப்பட்டிருந்ததாக குருதிக்கொடையாளர் கௌரவிப்பில் கலந்து கொண்டிருந்த குருதிக்கொடையாளர் ஒருவர் விபரித்திருந்தார்.
தொடர்சியாக குருதியை கொடை செய்து கொண்டிருக்கும் தமக்கு இத்தகைய கௌரவிப்பு நிகழ்வுகளுக்கு அழைக்கப்படும் போது மகிழ்ச்சி ஏற்படுகின்றது.
குருதிக்கொடையின் பயன்களை பயனாளர்கள் எடுத்துரைக்கும் போதும் வைத்திய அதிகாரிகள் குருதியின் அவசியம் பற்றிய கருத்துரைகளை வழங்கிய போதும் பெருமிதம் அடைய முடிந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
குருதியின் வகையினை இனம் கண்ட லான்ஸ்ரைனரின் நினைவாக உலக குருதிக்கொடையாளர் தினம் வருடந்தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.